பிரபல பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ, காசியில் உள்ள உள்ளூர் கடை ஒன்றில் லஸ்ஸி குடித்துவிட்டு அதனைப் பாராட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. லஸ்ஸியில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால், விளம்பரத்திற்காக மட்டுமே பாக்யஸ்ரீ நடித்தாரே தவிர, உண்மையாக அந்த லஸ்ஸியை அவர் குடிக்கவில்லை என்று நெட்டிசன்கள் சிலர் குற்றம் சாட்டி “போலி விளம்பரம்” என ட்ரோல் செய்யத் தொடங்கினர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் மண் குவளையில் லஸ்ஸி குடிப்பதை போன்ற மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ள பாக்யஸ்ரீ, அதிகாலை 3 மணிக்கே எழுந்து மங்கள ஆரத்தியில் பங்கேற்றுவிட்டு, கொளுத்தும் 40 டிகிரி வெயிலில் கங்கை நதிக்கரையில் நடந்த தனக்கு, இந்த லஸ்ஸி ஒரு சிறந்த எனர்ஜி பூஸ்டராக அமைந்தது என்று விளக்கியுள்ளார்.
View this post on Instagram
மேலும், “சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பது என்பது தனிப்பட்ட விருப்பம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது செட்டாகாது என்றாலும், தயிரில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் உடலுக்கு நல்லது” என்றும், லோக்கல் உணவுகளை விளம்பரப்படுத்துவது தங்களைப் போன்ற பிரபலங்களின் லாபத்திற்காக அல்ல, மாறாக சிறு குறு வியாபாரிகளுக்கு ஆதரவளிப்பதற்காகத்தான் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை விமர்சித்தவர்களுக்கு நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ள பாக்யஸ்ரீ, “அந்த போலி வீடியோவைப் பரப்பும் நீங்களா அங்கு நேரில் இருந்தீர்கள்? அந்த லஸ்ஸி மிகவும் இனிப்பாக இருக்கிறது, என்னால் குடிக்க முடியாது என்று நான் எங்கேயாவது பேசியதை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்களா? உங்கள் அம்மா உங்களுக்கு கோடைக் காலத்தில் லஸ்ஸி செய்து கொடுத்ததே இல்லையா? அரைகுறை அறிவோடு, பாதி வீடியோவை மட்டும் அப்லோட் செய்வதுதான் உண்மையான போலித்தனம்” என்று மிக ஆக்ரோஷமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
காசி என்பது ஒரு புனிதமான இடம், அங்கு வந்து இப்படிப்பட்ட அற்பத்தனமான குற்றச்சாட்டுகளை வைப்பது வெட்கக்கேடானது என்று சாடியுள்ள அவர், வீணாக வதந்தி பரப்புபவர்களின் பேச்சை கண்டுகொள்ளப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபத்தில் ரித்தேஷ் தேஷ்முக்கின் ‘ராஜா சிவாஜி’ திரைப்படத்தில் நடித்திருந்த பாக்யஸ்ரீயின் இந்த அதிரடி விளக்கம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
