பிரபல இயக்குனர் என். லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 2002-இல் பிளாக்பஸ்டர் ஹிட்டான  ரன் திரைப்படம் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல் ஒன்றை உடைத்துள்ளார். அதாவது, இந்த அதிரடி காதல் கதைக் களம் உண்மையில் தளபதி விஜயை  மனதில்கொண்டே எழுதப்பட்டது என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். லிங்குசாமியின் அறிமுகத் திரைப்படமான ‘ஆனந்தம்’ வெற்றிக்குப் பிறகு, இக்கதை முதலில் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியிடமும், பின்னர் ஏவிஎம் புரொடக்ஷன்ஸிடமும் சென்றுள்ளது.

கதையைக் கேட்ட தயாரிப்பாளர் சரவணன், இதனை விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கொண்டு சேர்த்துள்ளார். ஆனால், அப்போது விஜய் ‘தமிழன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், அந்தப் படத்தோடு ஒப்பிடும்போது ‘ரன்’ கதை சிறியதாகத் தெரியும் எனக் கருதி எஸ்.ஏ.சி இதனை நிராகரித்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், இந்த கதையே விஜய்யின் காதுகளுக்குப் போகவே இல்லை என்று லிங்குசாமி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தன் திரைப்பயணத்தின் மிகப்பெரிய ஏமாற்றமாக இதைக் கருதிய லிங்குசாமி, பின்னர் மாதவனை வைத்துப் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த மாதவனுக்கு இது முழு நீள ஆக்ஷன் படமாக அமைந்து, அவர் கேரியரை  மாற்றியது. படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்த பிறகு, ஹோட்டலில் நடந்த ஒரு பார்ட்டியில் விஜய்யைச் சந்தித்ததாக லிங்குசாமி நினைவுகூர்ந்துள்ளார்.

அப்போது கூட்டத்திலிருந்த விஜய், தன்னைத் தேடி வந்து கைகுலுக்கி, “அண்ணா, சூப்பரா பண்ணியிருக்கீங்க!” என்று மனதாரப் பாராட்டியுள்ளார். மேலும், விஜய்யின் அசாத்திய வளர்ச்சி குறித்துப் பேசிய லிங்குசாமி, “அவர் இந்த அளவிற்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று யாரும் அப்போது நினைத்துக் கூட பார்க்கவில்லை, அதை அவர் சாதித்துக் காட்டியுள்ளார்” எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோன்று சண்டக்கோழி மற்றும் வேட்டை ஆகிய திரைப்படங்களும் விஜய் செய்ய வேண்டியது தான் ஆனால் சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது என்றார்.