தமிழகத்தில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் த.வெ.க. அரசு எப்படி தட்டுத்தடுமாறி ஆட்சிக்கு வந்ததோ, அதேபோல் கீழ் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் நீதி பரிபாலனமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான அரசு வழக்கறிஞர்கள் அனைவரும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே விலகிவிட்டதாகத் தெரிகிறது.

அந்த இடங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கப் பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை த.வெ.க. கட்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கீழ்மை நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் வழக்கு விசாரணைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு மாவட்ட நீதிபதி, விசாரணைக்கு வந்த சாட்சியிடம் அரசு தரப்பில் குறுக்கு விசாரணை செய்யாததால், மீண்டும் அவரை நீதிமன்றத்திற்கு வரவழைப்பதற்காக, அவருக்குப் பயணப்படி வழங்க அரசுக்கு உத்தரவிடப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அரசின் சார்பாக, அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுவதற்குத் தாமதம் ஏற்பட்டாலும், உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக செயல்படும் அரசு நீதித் துறையினர் கீழ்மை நீதிமன்றப் பணிகளுக்குச் செல்லாமல் இருப்பதன் காரணம் என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆடு திருடி சிறை சென்றவர்களை எல்லாம் அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளது. கடிவாளம் இல்லாத குதிரை போல தமிழக வெற்றிக்கழக அரசு தறிக்கட்டு செயல்படுகிறது.

அரசு நிர்வாகத்திற்குப் பொய்க்கால் குதிரை ஆட்சியாளர்கள் புதியவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, அனுபவமிக்க சட்டத் துறையினரை அணுகி, தமிழகம் முழுவதும் முறையாகத் திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, நீதி பரிபாலனத்தைச் சீரமைக்க வேண்டும் என்று த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.
சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிவில் அல்லது கிரிமினல் பிரச்சனையால் பாதிப்பு என்றாலும் அவர்களின் கடைசி புகலிடமும், நம்பிக்கையும் நீதிமன்றங்கள்தான். முறையாக அரசு வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால், வழக்குகள் தள்ளிப்போகும்போது, வழக்காளிகள் தங்களுடைய வழக்கறிஞர்களுக்கு ‘பீஸ்-கட்டணம்’ கொடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலையும் உருவாகும்.

சிறு குழந்தைகள் கடல் மணலில் கோபுரம் கட்டி விளையாடுவதுபோல் இந்த ஆட்சியாளர்கள், அரசை கையில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.
நீதித் துறை மட்டுமன்றி, பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற அவதிக்குரிய சூழ்நிலைகள் இருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன. இந்தப் புகார்கள் எல்லாம் முதலமைச்சரின் காதுகளில் விழுகிறதா என்றே தெரியவில்லை. ஆகாயத்தில் கோட்டை கட்டாமல், அரசாட்சி கையில் என்ற நிலையை உணர்ந்து, வாக்களித்த மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்