மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கோயல், கொலையை அரங்கேற்றுவதற்கு முன்பாக கூகுளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களைத் தேடி முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி புனேயில் உள்ள லோஹ்கர் கோட்டையின் 400 அடி ஆழப் பள்ளத்தில் கேதனை, சியாவும் அவளது காதலன் சேத்தன் சவுத்ரியும் சேர்ந்து தள்ளிவிட்டுக் கொலை செய்தனர்.
போலீஸ் காவலில் இருக்கும் போது பெண்களுக்கு அடி விளுமா என்பது குறித்தும், இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு குறித்தும் சியா தனது இரண்டு மொபைல் போன்களில் தேடியுள்ளது அவளது ‘சர்ச் ஹிஸ்டரி’ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு பின் நாம் பிடிபட்டால் என்ன நடக்கும் என்பதை சியா முன்கூட்டியே கணக்கு போட்டுள்ளதை இது காட்டுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் சியாவின் படுக்கையறையிலிருந்து இரண்டாவது மொபைலை பறிமுதல் செய்த போலீசார், இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளையும் கண்டறிந்து தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த ஜோடியை ஜூலை 16 வரை சிறையில் வைப்பதற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலைக்கு சியா பயன்படுத்திய உத்தி, 2025-இல் மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை சம்பவத்தை ஒத்துள்ளது. கடந்த ஆண்டு மே 11-இல் திருமணமான இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, மேகாலயாவிற்கு தேன்நிலவு சென்ற போது மே 23 அன்று மாயமானார். பின்னர் ஜூன் 2-இல் ஒரு நீர்வீழ்ச்சி பள்ளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரது மனைவி சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. தற்போது சோனமிற்கு மேகாலயா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதை எதிர்த்து ராஜாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதற்கிடையே, கைதாகி செல்லும் போது சியா நடுவிரலைக் காட்டி அநாகரிக சைகை செய்த வீடியோ வைரலான நிலையில், காவலில் வாகனக் கதவு மூடிய போது அவளது இரண்டு விரல்களில் அடிபட்டதாகவும், அந்த காயத்தைத்தான் அவள் காட்டினாள் என்றும் அவளது தந்தை தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், கொலை நடந்த அடுத்த நாளே (ஜூன் 19) கேதனின் வீட்டிற்குச் சென்ற சியா, அவரது தந்தையிடம் “கேதன் நம்மை மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார், தைரியமாக இருங்கள்” என ஆறுதல் கூறியுள்ளார். ஜூன் 18 முதல் 23 வரை இந்த ஜோடி எந்த பயமும் இன்றி சாதாரணமாக உலா வந்ததோடு, கைதான பின்பும் கொஞ்சமும் வருத்தப்படாமல் இருந்துள்ளது.
மேலும், சேத்தன் சவுத்ரி ஒரே போனில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி, சியாவுடன் ‘கோட் வேர்ட்’ மூலம் ரகசியமாகப் பேசி வந்ததும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
