உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த முகமது ஷாரூக் என்ற வாலிபரை, இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபல இன்ஃப்ளூயன்சர் பெண் அர்ஷா மற்றும் அவரது நண்பர்களான அனஸ், ஷுஐப் ஆகியோர் காதலிப்பது போல நடித்து பிளாக்மெயில் செய்ததாகக் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இவர்கள், நைனிடாலுக்குச் சுற்றுலா சென்றபோது முதன்முதலில் நேரில் சந்தித்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அர்ஷா, ஷாரூக்கின் சில தனிப்பட்ட மற்றும் அநாகரிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.
அதன் பிறகு, அந்தத் தனிப்பட்ட பதிவுகளைச் சமூக ஊடகங்களில் லீக் செய்துவிடுவதாகவும், பொய் வழக்குகளில் மாட்டிவிடுவதாகவும் மிரட்டி அர்ஷாவும் அவரது நண்பர்களும் ஷாரூக்கிடம் பணம் பறிக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை பல்வேறு காலகட்டங்களில் ஷாரூக்கிடம் இருந்து அர்ஷா குழுவினர் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் மூலமாகப் பறித்துள்ளதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2023 ஜூலை மாதத்தில், இரு தரப்பினருக்கும் இடையே முத்திரைத்தாளில் ஒரு சமரசம் ஏற்பட்டு, தன் மீதான முந்தைய குற்றச்சாட்டுகள் பொய் என்று அர்ஷா ஒப்புக்கொண்ட போதிலும், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிளாக்மெயில் செய்து கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாரூக், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் மற்றும் சாட்டிங் ஸ்கிரீன்ஷாட்டுகளுடன் போலீசாரை அணுகினார். இந்தச் சம்பவம் குறித்து சம்பல் போலீசார் அர்ஷா உட்பட மூன்று பேர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
