அதிக சம்பளம் மற்றும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகளுக்காகப் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்த தம்பதியினர், சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘டயர் 2’ எனப்படும் இரண்டாம் கட்ட நகரங்களின் நன்மைகளை ஒப்பிட்டுப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து தொடக்கத்தில் தங்களுக்குப் பெங்களூரு நகரம் பெரிய சம்பளத்துடனும், சொந்த ஊரில் கிடைக்காத நவீன வாழ்க்கை வசதிகளுடனும் ஒரு கனவு இல்லமாகத் தெரிந்ததாக இந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், காலப்போக்கில் தங்களின் முன்னுரிமைகள் மாறியதாகக் கூறியுள்ளார்.

“>

இதனால் பெருநகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல், முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயங்கள், அதிகப்படியான செலவுகள் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேட் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட நிம்மதி போன்றவற்றை இழந்து தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறிப்பாக, தங்களின் வயதான பெற்றோரை விட்டுப் பிரிந்திருப்பது மற்றும் பெருநகரங்களின் மிதமிஞ்சிய பண விரயம் போன்ற காரணங்களால், தற்போது அமைதியான வாழ்க்கையைத் தேடி இரண்டாம் கட்ட நகரங்களுக்குத் திரும்புவது பற்றி யோசித்து வருவதாக அத்தம்பதியினர் கூறியுள்ளனர். இருப்பினும், இத்தகைய சிறிய நகரங்களில் பெருநகரங்களுக்கு இணையான தொழில் வளர்ச்சி, வருமானம் மற்றும் சுதந்திரமான சூழலை உருவாக்க முடியுமா என்ற குழப்பமும் அவர்களுக்குள் நீடிக்கிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வயதாகும்போது சிறந்த கல்வி, அவசர மருத்துவ வசதி மற்றும் உள்கட்டமைப்பிற்குப் பெருநகரங்களே சிறந்தது என்றும், அதே வேளையில் மன அமைதி மற்றும் குறைந்த செலவிலான வாழ்க்கைக்கு டயர் 2 நகரங்களே உகந்தது என்றும் இருவேறு கருத்துக்கள் இதன் மூலம் விவாதிக்கப்பட்டு வருகின்றன.