அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், “இந்த உலகத்தில் இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடு அமெரிக்கா மட்டும்தான்” என்று அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது வலுவான பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் உலக அரங்கில் இஸ்ரேல் தனித்துவிடப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவைப் போன்ற சிறந்த நட்பு நாடுகள் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக இந்திய மக்களிடமிருந்து இஸ்ரேலுக்குத் தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருவதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அமெரிக்கா மட்டும்தான் தங்களின் ஒரே பலம் என்ற வாதத்தை முற்றிலுமாக நிராகரித்த நெதன்யாகு, இஸ்ரேலின் அதிநவீன சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உலக நாடுகள் பலவும் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பல நாட்டுத் தலைவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசி ராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சைபர் துறையில் இஸ்ரேல் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதால், வெளிப்படையாகத் தெரிவதை விட தங்களுக்குப் பல நாடுகளுடன் ஆழமான உறவுகள் இருப்பதாக நெதன்யாகு இந்த அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
