பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆகஸ்ட் முதல் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை, சிறைத்துறையின் மருத்துவ அலட்சியம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் வழக்கில் 2025-ஆம் ஆண்டில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 73 வயதான இம்ரான் கான், தற்போது போதிய மருத்துவப் பராமரிப்பு இல்லாததால் தனது வலது கண்ணில் கிட்டத்தட்ட 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழல் குறித்து ஊடகத்திடம் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இம்ரான் கான் நாட்டின் பிரதமராக இருந்தவர் என்றும், நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை மறந்துவிடக் கூடாது என்றும் வேதனை தெரிவித்துள்ளார். சட்ட விவகாரங்கள் குறித்து தான் பேச விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இம்ரான் கான் தவறு செய்தாரோ இல்லையோ, ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரையும், உலகக்கோப்பை வென்று தந்த பெரும் வீரரையும் இத்தகைய முறையில் நடத்துவது முறையல்ல என்றும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by India Today (@indiatoday)

மேலும் முன்னதாக இம்ரான் கானுக்கு ஆதரவாக கபில்தேவ், சுனில் கவாஸ்கர், ஆலன் பார்டர், ஸ்டீவ் வா உள்ளிட்ட உலகின் 14 முன்னணி முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் இணைந்து, பாகிஸ்தான் அரசுக்குத் திறந்த மடல் ஒன்றை அனுப்பி, வெளிப்படையான சட்ட நடைமுறைகளையும் கண்ணியமான சிகிச்சையையும் உறுதி செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.