உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், திருமண வரனைப் பெண் மறுத்ததால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகன் அந்தப் பெண்ணைக் காரில் இருந்து வெளியில் இழுத்துச் செங்கல்லால் மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் கான்பூர் ஐஐடி-யில் பணிபுரியும் 38 வயதுப் பெண்ணை, தேவாசிஷ் நிகாம் என்ற நபர் காரில் அழைத்துச் சென்றபோது, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தேவாசிஷ், காரை நிறுத்திவிட்டுச் சாலையோரம் கிடந்த செங்கல்லைக் கையில் எடுத்ததைக் கண்டு பயந்துபோன அந்தப் பெண் காருக்குள் கதவுகளைப் பூட்டிக்கொண்டார். எனினும், காரின் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து, அந்தப் பெண்ணை வீதியில் இழுத்து வந்து அவரது தலை மற்றும் உடலில் செங்கல்லால் தேவாசிஷ் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

அதோடு அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், தேவாசிஷைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது, தான் செய்த கொடூரக் குற்றத்திற்காகச் சிறிதும் வருந்தாத தேவாசிஷ், அங்கு வந்த போலீசாரிடம் தனது குடும்பப் பின்னணியைக் காட்டி, “என் அம்மா ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி” என்று கூறி அதிகாரத் திமிருடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய தாய் லக்னோ மேம்பாட்டு ஆணையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தேவாசிஷைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.