மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டக்குடி பகுதியில், சொந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்துச் சாம்பலை கிணற்றில் கரைத்த கணவனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நடுக்கமடைய வைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​மதுரை கோட்டக்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும், கார்த்திகா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

நடத்தைச் சந்தேகத்தால் வெடித்த சண்டை!

பிரபாகரனுக்குத் தனது மனைவி கார்த்திகாவின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வீட்டில் நிம்மதி இல்லாமல் பயங்கரப் தகராறு வெடித்துள்ளது. சண்டை முற்றியதால் மனவேதனையடைந்த கார்த்திகா, தனது குழந்தையை அழைத்துக் கொண்டு கோபமாகத் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

சமாதானம் பேசி கூட்டிட்டு வந்து கொடூரக் கொலை!

மனைவி தாய் வீட்டுக்குச் சென்றதைத் தொடர்ந்து, பிரபாகரன் அங்கு சென்று இனிமேல் சண்டை போட மாட்டேன் என்று சாதுரியமாகச் சமாதானம் பேசி கார்த்திகாவை மீண்டும் தனது வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துள்ளார். ஆனால், வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பிரபாகரன், கார்த்திகாவை வயல்வெளிக்குக் கூட்டிச் சென்று அங்கு வச்சு கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

​கொலை செய்ததோடு மட்டுமில்லாமல், மாட்டிக்குவோம் என்ற பயத்தில் கார்த்திகாவின் உடலை அங்கேயே வச்சு எரித்து, ஆதாரங்களை மறைப்பதற்காக அந்தச் சாம்பலை அருகில் இருந்த கிணற்றில் கரைத்து நாடகமாடியுள்ளார். கார்த்திகாவைக் காணவில்லை என்று உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், பிரபாகரனின் இந்தச் சைக்கோத்தனமான கொடூரம் அம்பலமாகியுள்ளது. போலீசார் தற்போது பிரபாகரனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதால் மதுரை பகுதியில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது!