முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது மீண்டும் ஸ்டாலினே முதல்வராக வருவார் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் திமுகவினரால் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்தே அதிமுகவின் அரசியல் நீண்டகாலமாக நகர்ந்து வந்தது. அப்படிப்பட்ட நிலையில், வாழ்நாள் முழுவதும் திமுகவை எதிர்த்த ஒரு தலைவரால் உருவாக்கப்பட்ட ஓபிஎஸ், இன்று அதே திமுக ஆட்சிக்கு ஆதரவாகப் பேசுவது அவர் வகித்த பதவிக்கும், அவர் நடத்திய ‘தர்மயுத்த’ போராட்டத்திற்கும் துரோகம் செய்வது போல இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசியல் லாபத்திற்காகத் தனது கொள்கைகளையும், கடந்த கால வரலாற்றையும் ஓபிஎஸ் மறந்துவிட்டாரா என்ற கேள்வியைத் தமிழிசை எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஒருவர், இப்போது திமுகவின் வெற்றியை விரும்புவது தொண்டர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. “உங்கள் தர்மயுத்தம் எங்கே போனது? இதுதான் நீங்கள் காட்டும் தர்மமா?” என்று தமிழிசை கேட்டிருக்கும் கேள்விகள், ஓபிஎஸ்ஸின் அரசியல் நம்பகத்தன்மையைப் பொதுமக்களிடையே பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.
