சென்னையைச் சேர்ந்த ஐடி (IT) பெண் ஊழியரான மகேஸ்வரி மோகன், தான் ஆசை ஆசையாய் வேலைக்குச் சேர நினைத்து, தன்னை இரண்டு முறை நிராகரித்த அதே ‘காக்னிசண்ட்’ (Cognizant) நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆச்சரியப்படும் விதமாகச் சேர்ந்துள்ள தனது நெஞ்சை நெகிழ வைக்கும் வெற்றிக் கதையை லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கல்லூரிப் படிப்பை முடித்த கடந்த 2022-ஆம் ஆண்டு, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலை கிடைக்காததால் விடிய விடிய அழுது தவித்த மகேஸ்வரி, எப்படியாவது அந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற வெறியோடு உழைத்துள்ளார். பின்னர் ஜூன் 2023-இல் நேரடியாகச் சென்று வாக்-இன் இன்டர்வியூ (Walk-in Interview) மூலம் இறுதிச் சுற்று வரை முன்னேறியும், அவருக்கு மீண்டும் நிராகரிப்பே பரிசாகக் கிடைத்துள்ளது.
இதனால் “ஒருவேளை நாம் இந்த கம்பெனிக்குத் தகுதியில்லையோ” என்று மனமுடைந்த அவர், அதே ஆண்டு நவம்பரில் ‘ஹெச்சிஎல் டெக்’ (HCLTech) நிறுவனத்தில் சீனியர் பிராசஸ் எக்ஸிகியூட்டிவ் ஆக வேலைக்குச் சேர்ந்து அங்கேயே பல புதிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார்.
இப்படித் தனது கரியரில் அடுத்த கட்டத்திற்குச் சென்றாலும், மனதின் ஒரு மூலையில் காக்னிசண்ட் பற்றிய ஏக்கம் மட்டும் அப்படியே இருந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த ஏப்ரல் 2026-இல் காக்னிசண்ட் நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு பிரிவில் (Recruiter) இருந்து எதிர்பாராத விதமாக இவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது; இந்த முறை அனுபவம் வாய்ந்தவராக இன்டர்வியூவின் அனைத்துச் சுற்றுகளையும் அசத்தலாகக் கிளியர் செய்து, தற்போது ஜூன் 2026-இல் ஆர்.டி.ஏ (RTA) பணியில் அதிகாரப்பூர்வமாகக் காக்னிசண்ட் நிறுவனத்தில் அவர் இணைந்துள்ளார்.
“நான் ஃப்ரெஷராக அந்த கம்பெனியில் சேர ஆசைப்பட்டேன், ஆனால் கடவுள் என்னை 10 மடங்கு கூடுதல் திறமையுள்ள எக்ஸ்பீரியன்ஸ் ஊழியராக அங்கே அனுப்ப நினைத்திருக்கிறார்; உங்களுக்கான நேரம் தள்ளிப் போகவில்லை, நீங்கள் இன்னும் சிறப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என அவர் பகிர்ந்துள்ள பாசிட்டிவ் பதிவு, வேலை கிடைக்காமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்து இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
