உலகளவில் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்தாலும், தந்தை-மகன் அல்லது தந்தை-மகள் பாசத்தை ஆழமாகப் பேசும் திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை. அந்த வகையில், இந்த ஆண்டுத் தந்தையர் தினத்தை (Father’s Day) முன்னிட்டு, எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சினிமா துறை விரிவுரையாளரான டேனியல் ஓ’பிரையன், மறைந்த தனது தந்தையின் நினைவாக, தந்தை பாசத்தை உணர்த்தும் 7 உன்னதமான உலகத் திரைப்படங்களின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.
இதில் முதலாவதாக, ராபர்ட் டி நிரோ இயக்கி நடித்த ‘ஏ பிராங்க்ஸ் டேல்’ (A Bronx Tale – 1993) திரைப்படம், ஒரு நேர்மையான உழைப்பாளி தன் மகனை ரவுடியிசக் கும்பலிடம் இருந்து காப்பாற்றப் போராடுவதைச் சித்திரிக்கிறது.
அடுத்ததாக கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கி நடித்த ‘ஹன்கிடாங்க் மேன்’ (Honkytonk Man – 1982) மற்றும் அவரது நிஜ மகனுடன் நடித்த ‘ஏ பெர்ஃபெக்ட் வேர்ல்ட்’ (A Perfect World – 1993) ஆகிய படங்கள் தந்தை-மகன் உறவின் ஆழத்தைப் பேசுகின்றன. ஆஸ்கார் விருது பெற்ற சிறுமி டாடம் ஓ’நீல் நடித்த ‘பேப்பர் மூன்’ (Paper Moon – 1973), தந்தை-மகள் வேடத்தில் நடித்து ஏமாற்றும் இருவருக்குள் மலரும் உண்மையான பாசத்தைச் சொல்கிறது.
மேலும், அண்ணனைத் தந்தையாகப் பார்க்கும் ‘செவன் பிரைட்ஸ் ஃபார் செவன் பிரதர்ஸ்’ (Seven Brides for Seven Brothers – 1954) மற்றும் தந்தை இல்லாத சிறுவனுக்கு வழிகாட்டியாக வரும் ‘ஷேன்’ (Shane – 1953) ஆகிய கிளாசிக் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இறுதியாக, தனது தச்சர் தந்தை தனக்கு வாங்கிக் கொடுத்த முதல் விஹெச்எஸ் (VHS) கேசட்டான, உலகப் புகழ்பெற்ற டிஸ்னியின் ‘பினோக்கியோ’ (Pinocchio – 1940) அனிமேஷன் படத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்;
பொம்மை செய்யும் கெப்பார்டோவுக்கும் பினோக்கியோவுக்கும் உள்ள நிபந்தனையற்ற தந்தை-மகன் அன்பை இந்தப் படம் அழகாக விவரிக்கிறது. தங்களின் தந்தையோடு அமர்ந்து பார்க்க நினைப்பவர்களுக்கும், தந்தையின் நினைவுகளில் வாழ்பவர்களுக்கும் இந்த 7 படங்கள் மிகச்சிறந்த உணர்வுப்பூர்வமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
