தமிழக அரசியலில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவாதம் திமுக – காங்கிரஸ் இடையே மோதலாக வெடித்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது கொள்கையை அறிவித்த பிறகு, காங்கிரஸ் தரப்பில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
இது தொடர்பாக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பேசியது திமுகவினரை அதிருப்தியடைய செய்தது. இந்நிலையில், மதுரை திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, “இந்தியா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தான் தாங்கிப் பிடிக்கிறார்கள்; ஆனால் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கக் கூடாது” என்று பகிரங்கமாகச் சாடினார்.
இந்த விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும்; இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், அதிகாரத் திமிருடன் இருப்பவர்களைப் பார்த்து கூட்டணிக் கட்சிகள் இனி அமைதியாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
