தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திமுக அரசு எப்போதும் பெண்களுக்கான அரசாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கடுமையாகச் சாடினார். குறிப்பாக மணிப்பூர், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கும் பாசிச சக்திகள், பழைய மற்றும் புதிய அடிமைகளைச் சேர்த்துக் கொண்டு கனவு காண்பதாகக் குறிப்பிட்ட உதயநிதி, எத்தனை பேர் வந்தாலும் திமுகவையும் தமிழ்நாட்டையும் யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று ஆவேசமாகப் பேசினார்.
பாசிசம் என்பது பாஜகவின் அடையாளம் என்றும், மகளிர் முன்னேற்றமே திமுகவின் அடையாளம் என்றும் கூறிய அவர், மற்ற கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு நடத்தும் வேளையில், திமுக மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்தித் தன் வலிமையை நிரூபித்து வருவதாகவும் தெரிவித்தார்.
