சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33). கணினி பொறியாளரான இவர், தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரும் செல்வினும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஷாலினி கடுமையான மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனவேதனையில் இருந்த ஷாலினி, திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷாலினியின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணத்தில் முடிந்து, 6 வயது குழந்தையோடு நகர்ந்து கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை இப்படி பாதியிலேயே முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஷாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மொபைல் போனில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதனைத் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் கதறி அழுதபடி பேசியுள்ள ஷாலினி, “என்னால் இனி இந்தத் துயரத்தைத் தாங்க முடியாது. பிரிந்து சென்று வாழ நினைத்தாலும் வாழ விடமாட்டீர்கள். என்னால் யாருக்கும் எந்த பாரமும் வேண்டாம். என் கணவனை யாரும் சும்மா விடாதீர்கள். நான் எவ்வளவோ பொறுத்துப் பார்த்துவிட்டேன், ஆனால் என்னால் முடியவில்லை. நான் இந்த வீடியோவை உங்களுக்கு அனுப்புகிறேன், இதனை போலீசில் ஒப்படையுங்கள். ஆவடியில் உள்ள வீடு நம் இருவர் பெயரிலும் உள்ளது, அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். நானே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அவன் என்னை அந்த அளவிற்கு கொடுமைப்படுத்துகிறான். ப்ளீஸ்… அவனை சும்மா விடாதீர்கள், நான் போகிறேன்” என்று உருக்கமாகக் கூறி கண் கலங்கியுள்ளார்.
மரண வாக்குமூலமாக மாறிய இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து ஷாலினியின் கணவர் செல்வினை அதிரடியாகக் கைது செய்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று காலையில் தங்களது 6 வயது குழந்தையை ஷாலினி அடித்ததாகத் தெரிகிறது. இதனைப் பார்த்த கணவர் செல்வின், ஷாலினியைக் கடுமையாகக் கண்டித்து தாக்கியுள்ளார்.
பின்னர் அவர் வழக்கம் போல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றுவிட்டார். கணவன் அடித்த வேதனையிலும், மன உளைச்சலிலும் இருந்த ஷாலினி அதன் பின்னரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனினும், ஷாலினியின் தற்கொலை முடிவுக்குக் குடும்பத் தகராறு மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
