நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் மேடையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முயலும் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து அவர் ஆவேசமாகப் பேசிய பேச்சு தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மேடையில் கொந்தளித்த பா.ரஞ்சித்:

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், நீட் தேர்வுக்கு எதிராகத் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துத் போராடும் மாணவர்களைத் தாக்குவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கக்கூடிய முன்னோடிகளாகத் திகழும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு யாருடைய அனுமதியைப் பெற்றீர்கள் என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

மேலும், சீருடை மற்றும் அடையாளங்கள் எதுவுமின்றி மறைமுகமாக வந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைக் கடுமையாகச் சாடிய அவர், “உங்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? நீங்கள் பாசிசத்திற்கு எதிரானவர்கள் தானே, பின் ஏன் மாணவர்களை அடிக்கிறீர்கள்?” என்று அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பினார். தயவுசெய்து மாணவர்களின் நியாயமான குரலை ஒடுக்க நினைக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

“>

 

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டமும், அதற்கு ஆதரவாகத் திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வருவதும் தற்போது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் இந்த அதிரடிப் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.