கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) பிரமுகர் இளையராஜா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. விபத்து போல் நாடகமாடப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொலை வழக்கில், அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  இளையராஜாவும், அஸ்வினிதா என்பவரும் காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஷ்ணு (10), மிதுன் (8) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு அருகில் இளையராஜா சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் இது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டாலும், அஸ்வினிதாவின் நடவடிக்கைகளும் பேச்சும் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

போலீசார் ரகசியமாக நடத்திய விசாரணையில், அஸ்வினிதாவும் இளையராஜாவின் சித்தி மகனான வெங்கடேசன் என்பவரும் தினமும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. அண்ணன் முறை என்ற பெயரில் வீட்டுக்கு வந்து சென்ற வெங்கடேசனுக்கும், அஸ்வினிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதைக் கண்டித்த கணவனைத் தீர்த்துக்கட்ட காதலர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோருடன் மது அருந்தச் சென்றுள்ளார் இளையராஜா. அங்கு போதை தலைக்கேறியதும், தனது மனைவியுடன் பழகக் கூடாது என்று வெங்கடேசனை இளையராஜா கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், இளையராஜாவைச் சரமாரியாகத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், உடலை காரில் ஏற்றிச் சென்று இளையராஜா ஓட்டி வந்த ஸ்கூட்டரைக் கிணற்றின் மீது மோதி விபத்தில் இறந்ததைப் போல நாடகமாடி, உடலை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தத் துல்லியமான விசாரணையின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த வெங்கடேசன், அவரது நண்பர் செல்வம் மற்றும் கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த மனைவி அஸ்வினிதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.