உயர் கல்விக்காகத் தைவான் நாடு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள பெண் ஒருவரைக் காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிபட்டியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்புக்காகத் தைவான் சென்றுள்ளார். அங்கு டேட்டிங் செயலி மூலமாகத் தைச்சுங் நகரைச் சேர்ந்த ஜோயிங்யிங் என்ற வெளிநாட்டுப் பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில், படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணிடம் ஜெகதீஷ் உறுதியளித்துள்ளார். இதைக் கண்மூடித்தனமாக நம்பிய அந்தத் தைவான் பெண், ஜெகதீஷின் படிப்புச் செலவுகள், தங்குமிடம் மற்றும் பிற அவசியத் தேவைகள் அனைத்திற்கும் முழுமையாக உதவி புரிந்துள்ளார். இதனிடையே இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெகதீஷ் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்தியாவிற்குத் திரும்பியுள்ளார்.
ஊருக்குச் சென்ற பிறகு தனது பெற்றோருடன் பேசிவிட்டுத் திரும்பி வந்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறிச் சென்ற அவர், அதன்பிறகு அந்தப் பெண்ணுடனான அனைத்துத் தொடர்புகளையும் முற்றிலுமாகத் துண்டித்துள்ளார். சுமார் ஐந்து மாதங்களாக அவரைத் தொடர்புகொள்ள முயன்று தோற்றுப்போன அந்த வெளிநாட்டுப் பெண், உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞரின் உதவியுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஏமாற்று வேலையில் ஈடுபட்ட ஜெகதீஷைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
