தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்து இப்போதுதான் ஆரம்பக் கட்டங்களைக் கடந்துவரும் த.வெ.க., ஆட்சியைப் பிடித்து நூறு நாட்களைக் கடந்துள்ளது. தனிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பல கட்சிகளின் ஆதரவோடு சிறுபான்மை அரசாக வலம்வரும் தற்போதைய சூழலில், அக்கட்சியின் அமைச்சர்கள் வெளிப்படுத்தும் தேசிய அரசியல் கருத்துகள் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

ஆட்சியைப் பிடித்துச் சில நாட்களே ஆன நிலையில், நாட்டின் அடுத்த பிரதமர் விஜய் என்ற தொனியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பேசி வருவது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “த.வெ.க.வினரின் இந்தக் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளது. தற்போதைக்கு அவர்களுக்கு எம்.பி.க்கள் கூட இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டும் ஆதரவு அளிக்காவிட்டால், தற்போதைய அரசியல் சூழலே மாறியிருக்கும்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் த.வெ.க. இடையேயான கூட்டணியில் ஆரம்பத்திலேயே விரிசல் விழத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கும் நிலையில், தற்போதே பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேசுவது தேவையற்றது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

அரசியலைப் பொறுத்தவரை த.வெ.க. இன்னும் பலத்த அடிகளுடன் தன் வேர்களை முழுமையாகப் பரப்ப வேண்டிய கட்டத்தில் உள்ளது. தமிழகத்திலேயே இன்னும் முழுமையாகக் காலூன்றாத நிலையில், தேசிய அளவிலான இலக்குகளை இப்போதே முன்னெடுப்பது முதிர்ச்சியற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. முதலில் தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்குவதன் மூலமும், இடைத்தேர்தல்களில் தன் பலத்தை நிரூபிப்பதன் மூலமுமே அந்தப் புகழ் நாடு முழுவதும் பரவ முடியும்.

மேலும், அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கங்களாக மாற்றி வெற்றியடைவது ஒரே நாளில் நடந்துவிடக்கூடிய காரியமல்ல. எனவே, தேவையில்லாமல் தேசிய அரசியலைப் பேசி, தற்போதைய கூட்டணியில் குதர்க்கத்தை ஏற்படுத்தி, அதுவே கட்சிக்குப் பின்னடைவாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது த.வெ.க.வின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.