தமிழகத்தில் ஊழலை ஒழித்துத் தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே தமது முதன்மையான நோக்கம் என்று கூறி இளம் தலைமுறை வாக்காளர்களை ஈர்த்துவரும் தமிழக வெற்றிக் கழகம், தற்போது தன் கொள்கை வட்டத்தில் இருந்து விலகிச் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சா. ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

ஜென்சி எனப்படும் புதிய தலைமுறை வாக்காளர்களை நம்பித் தொடங்கப்பட்ட த.வெ.க., ஏற்கனவே ஊழல் வழக்குகளைச் சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களையும், ஊழல் சக்திகள் என அக்கட்சியின் தலைவர் விஜயால் முற்காலத்தில் விமர்சிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.-க்களையும் தங்களது கட்சியில் பெருமளவில் இணைத்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 எம்எல்ஏக்கள் த.வெ.க.வில் இணைய உள்ளதாகப் பெருமையாகப் பேசிவருவது இந்த ஐயங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு மக்கள் சிந்தனையும் இல்லாமல் பதவியும் பணமும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்கள் த.வெ.க.வில் இணைந்ததும் வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்ட தூய்மையானவர்களாக மாறிவிடுகிறார்களா?” என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு இதுவே சாட்சியாக இருப்பதாகவும், த.வெ.க. குதிரைப்பேரத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகளை இது உறுதிப்படுத்துவதாகவும் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் த.வெ.க. ஈடுபட்டால், மக்கள் தன் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அது இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை என்றும் தனது பதிவில் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.