விண்வெளியில் நீண்ட காலம் தங்கும் விண்வெளி வீரர்களுக்கு மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்னைகள் ஏற்படுவது நீண்ட காலமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள, நாசாவுடன் இணைந்து கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 52 விண்வெளி வீரர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல மாதங்கள் தங்கியிருந்த வீரர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 488 ரத்த மாதிரிகள் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன. விண்வெளிக்குச் சென்ற பிறகு குடல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, குடலில் உணவு நகரும் வேகம் குறைவது மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால், குடலின் இயல்பான இயக்கத்துக்கு அது ஒரு வகையில் உதவுகிறது. ஆனால் விண்வெளியில் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை நிலவும் சூழலில் உணவு குடல் வழியாக நகரும் வேகம் குறையக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உணவு நீண்ட நேரம் குடலில் தங்கும்போது, அங்குள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாக குடல் நுண்ணுயிரிகள் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால் உணவு நகரும் வேகம் குறையும்போது, நார்ச்சத்து குறைந்த நிலையில் புரதத்தை அதிகமாகச் சிதைக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் உருவாகும் சில வேதிப்பொருள்கள் ரத்தத்தில் கலக்கக்கூடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களின் ரத்தத்தில் சுமார் 40 வகையான வளர்சிதை மாற்றப் பொருள்களில் மாற்றங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக, குடல் நுண்ணுயிரிகள் புரதத்தைச் சிதைப்பதுடன் தொடர்புடைய சில பொருள்களின் அளவு விண்வெளிப் பயணத்தின்போது அதிகரித்திருந்தது. பூமிக்குத் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்த மாற்றங்கள் பெருமளவில் குறைந்துவிட்டன. இதனால், விண்வெளிப் பயணத்துக்கும் குடல் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், குடலில் உணவு நகரும் வேகத்தை நேரடியாக அளவிடவில்லை என்பதால், ஈர்ப்பு விசை குறைவதே இதற்கு காரணம் என்பதை ஆய்வு முழுமையாக நிரூபிக்கவில்லை என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய் போன்ற இடங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ள நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விண்வெளி வீரர்களின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள், குடல் நுண்ணுயிரிகளுக்கு உதவும் உணவுமுறைகள் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இவற்றில் எது விண்வெளியில் சிறப்பாக செயல்படும் என்பது இன்னும் தனியாகச் சோதிக்கப்பட வேண்டியுள்ளது. விண்வெளியில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், பூமியிலும் நீண்ட காலம் படுக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உதவலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.