பார்க்க நல்ல ஃபிட்டாக, ஒல்லியாக இருப்பவர்களுக்கு எந்த உடல்நலப் பிரச்சனையும் வராது என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். வெளியில் ஆரோக்கியமாகத் தெரியும் பல இந்திய ஆண்கள், தங்களுக்குள்ளே ஒரு மிகப்பெரிய ஆபத்தான உடல்நல நெருக்கடியைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.
ஒல்லியாக இருந்தாலும் 30 மற்றும் 40 வயதிலேயே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு ஆண்கள் அதிக அளவில் ஆளாகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் ‘விசரல் ஃபேட்’ (Visceral Fat) எனப்படும் உட்புறக் கொழுப்புதான். இது கல்லீரல், இதயம் போன்ற உள் உறுப்புகளைச் சுற்றி ரகசியமாகப் படிந்து, வெளியே தெரியாமலேயே சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை உருவாக்குகிறது.
இந்திய ஆண்களின் மரபணு அமைப்பானது, இயற்கையிலேயே கொழுப்பை உள் உறுப்புகளில் சேமித்து வைக்கும் தன்மை கொண்டது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் 40 அல்லது 50 வயதில் மாரடைப்பு வந்திருந்தால், நீங்கள் பார்க்க எவ்வளவு ஃபிட்டாக இருந்தாலும், உங்களுக்கு அந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, இந்திய ஆண்களிடையே உடல் பருமன் 22%-லிருந்து 27%-ஆகவும், சர்க்கரை நோயின் பாதிப்பு 15%-லிருந்து 21%-ஆகவும் உயர்ந்துள்ளது. இதைக் கண்டறிய தற்போது ‘பாலிஜெனிக் ரிஸ்க் ஸ்கோர்’ போன்ற நவீன மரபணு பரிசோதனைகள் வந்துவிட்டன. இவை நோய் வருவதற்கு முன்பே எச்சரிக்கும் திறன் கொண்டவை.
எனவே, வெளிப்புறத் தோற்றத்தை வைத்து மட்டுமே ஆரோக்கியத்தைத் தீர்மானிக்க முடியாது. சீரான உணவு, உடற்பயிற்சியோடு சேர்த்துத் தகுந்த இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்வதும், புகை மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பதும், இடுப்புச் சுற்றளவைச் சரியாகப் பராமரிப்பதும் இந்தச் ‘சைலண்ட்’ ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
