மாதவிடாய் நிறுத்தம் என்பது பெண்களுக்கு இனப்பெருக்க காலம் முடிவடையும் இயற்கை நிகழ்வாகும். தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால் அதை மாதவிடாய் நிறுத்தம் என்கிறோம். இந்தக் காலகட்டத்தில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைப்பதால் பெண்களின் உடலில் மட்டுமல்லாமல், அவர்களின் மன ஆரோக்கியத்திலும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் மூளையில் உள்ள செரோடோனின், டோபமைன் போன்ற வேதிப்பொருட்களின் அளவு மாறுபடுகிறது. இதனால் பெண்களிடம் திடீர் கோபம், பதற்றம், மறதி, மனச்சோர்வு மற்றும் காரணமில்லாத கவலை போன்றவை உண்டாகின்றன. மேலும், இரவில் ஏற்படும் அதிக வியர்வை காரணமாகத் தூக்கம் கெட்டு, நரம்பு மண்டலமும் சோர்வடைகிறது. இதனால் தான் பெண்கள் பலர் இந்தக் காலத்தில் “நாங்கள் நாங்களாகவே இல்லை” என்று உணர்கிறார்கள்.

ஹார்மோன் மாற்றங்கள் மட்டுமன்றி, தூக்கமின்மை, உடல்நல மாற்றங்கள், வேலைப் பளு மற்றும் குடும்பப் பொறுப்புகள் போன்ற சமூகக் காரணிகளும் பெண்களின் மனநிலையைப் பெருமளவில் பாதிக்கின்றன. இந்தக் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் இயல்பானவை என்றாலும், அவை தொடர்ச்சியாக நீடிக்கும் போது பெண்களின் அன்றாட வாழ்க்கையையும் குடும்ப உறவுகளையும் பாதிக்கத் தொடங்குகின்றன.

காரணமில்லாத சோகம், பயம், தூக்கமின்மை அல்லது இயல்பான பணிகளைச் செய்ய முடியாத நிலை 2 முதல் 3 வாரங்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மனநல நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாகத் தீவிர மனச்சோர்வு அல்லது சுய பாதிப்பு எண்ணங்கள் தோன்றினால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவ உதவியைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.

அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, தகுந்த ஹார்மோன் சிகிச்சை, சீரான தூக்கம் மற்றும் முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இந்தச் சிக்கல்களை எளிதாகக் கடக்க முடியும். சரியான மருத்துவ வழிகாட்டுதலும், குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இருந்தால் பெண்கள் இந்த மாற்றத்தை தைரியமாக எதிர்கொண்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் வாழ முடியும்.