இப்போது மாரடைப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிலருக்கு நெஞ்சு வலி போன்ற வெளிப்படையான அறிகுறிகள் தோன்றும், ஆனால் சிலருக்கு எந்தவொரு தெளிவான அறிகுறியும் இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதையே “சைலன்ட் ஹார்ட் அட்டாக்” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் இது ஏற்படுகிறது.

சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருப்பதால், பலரும் இதைச் சாதாரண அஜீரணம் அல்லது உடற்சோர்வு என்று நினைத்து அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் தீராத அசாதாரண சோர்வு இதன் முதல் முக்கிய அறிகுறியாகும். இதயம் ரத்தத்தைச் சரியாக பம்ப் செய்ய முடியாததால் இந்தச் சோர்வு ஏற்படுகிறது.

இரண்டாவதாக, காரணம் இல்லாமல் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவது அல்லது மூச்சு வாங்குவதில் சிரமம் உண்டாவது. மூன்றாவதாக, திடீரென ஏற்படும் தலைசுற்றல், குமட்டல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் தோன்றும். ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் இந்த அறிகுறிகளைப் பலர் உணவு விஷம் அல்லது நீர்ச்சத்து குறைபாடு என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நான்காவதாக, இரவில் தூக்கமின்மை, காரணமில்லாத பயம் அல்லது பதற்றம் ஏற்படுவது. ஐந்தாவதாக, லேசாக வந்து வந்து போகும் நெஞ்சு வலி. இது தொடர்ச்சியாக இல்லாமல் இடைவெளியில் வருவதால், இதைப் பலர் சாதாரண அசிடிட்டி என நினைத்துப் புறக்கணித்து விடுகிறார்கள். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது பெரிய ஆபத்தைத் தவிர்க்க உதவும்.

குறிப்பாக, ஆண்களை விட பெண்களுக்கே சைலன்ட் ஹார்ட் அட்டாக் அதிகம் ஏற்படுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்யாதவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், முதியவர்கள் மற்றும் குடும்பத்தில் இதய நோய் பின்னணி உள்ளவர்கள் இதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.