கோடைகால வெப்பத்திலிருந்து தப்பிக்க இன்று பெரும்பாலானோர் இரவு முழுவதும் ஏசி-யில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். பகல் முழுவதும் வியர்வையில் நனைந்துவிட்டு, இரவில் குளு குளு ஏசி காற்றில் தூங்குவது இதமாக இருந்தாலும், அது நம் உடலுக்குள் பல அறியாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இரவு முழுவதும் ஏசியில் தூங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் உடலில் தோன்றும் 3 முக்கிய அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

ஏசி மெஷின்கள் அறையில் இருக்கும் வெப்பத்தைக் குறைப்பதோடு, அங்குள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி வறண்ட காற்றாக மாற்றுகின்றன. காலையில் எழுந்தவுடன் தொண்டையில் வறட்சி, வலி அல்லது தொடர் இருமல் இருந்தால், ஏசியின் உலர் காற்று உங்களின் சுவாசப்பாதையைப் பாதித்துள்ளது என்று அர்த்தம்.

அதேபோல், ஏசி அறையில் நீண்ட நேரம் தூங்குவதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வறட்சியடைந்து அதிகாலையிலேயே கடுமையான தலைவலி உண்டாகிறது. இது தொடர்ந்தால் பின்னாளில் சைனஸ் மற்றும் மைக்ரேன் தலைவலியாக மாறக்கூடும்.

இயற்கையான காற்றோட்டம் இல்லாத குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படும்போது, தோலில் உள்ள ஈரப்பதம் மறைந்து சருமம் சுருக்கமடையத் தொடங்கும். மேலும், தசைகள் இறுக்கமடைந்து அதிகாலையில் எழுந்திருக்கும்போது கை, கால் மற்றும் மூட்டுகளில் கடுமையான பிடிப்பு அல்லது வலியை ஏற்படுத்தும்.

இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க இரவு முழுவதும் ஏசியை ஓடவிடாமல், தூங்கச் சென்ற சில மணி நேரங்களில் தானாகவே ஆஃப் ஆகும்படி டைமர் செட் செய்வது நல்லது. இவை பொதுவான ஆரோக்கியத் தகவல்கள் மட்டுமே என்பதால், தொடர் உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.