தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், நவீனத் தொழில்நுட்பங்களை இணைத்து “வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி” அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் அவர்கள் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

ரூ. 5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ள இந்த செயலியின் மூலம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசுச் சேவைகளை மக்கள் தங்களது சொந்தக் கைபேசிகள் மூலமாகவே எளிய முறையில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நவீன டிஜிட்டல் திட்டத்துடன் சேர்த்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும் முதற்கட்டமாக ரூ. 50 லட்சம் செலவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய “தமிழ் இணைய மொழி ஆய்வகம்” நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகப் பணிகளின் தரத்தை உயர்த்தவும், முடிவெடுக்கும் முறையை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் சுகாதாரத்துறை, வேளாண்மைத் துறைக்கான சிறப்பு ஏஐ மாதிரிகள் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதுமட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ. 10 கோடியில் இலவச செயற்கை நுண்ணறிவுச் சேவைகள் மற்றும் ரூ. 50 கோடி தொடக்க நிதியுடன் “வெற்றித் தமிழகம் ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தாக்க நிதியம்” உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வெற்றித் தமிழ்நாடு இணையதளம் அமைக்கப்படும் என்ற இந்த அதிரடியான அறிவிப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.