சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ஆம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில், சிவப்பு நிற சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்த பெண் ஹயாத் நிஷா என்பதைக் கண்டறிந்தனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஹயாத் நிஷா, கூடுவாஞ்சேரியில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த அசாமைச் சேர்ந்த ராகுல் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பகவதி மாஜி ஆகியோர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய தடயமாக ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில், சம்பவம் கூடுவாஞ்சேரியில் நடந்திருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராகுல் மற்றும் பகவதி மாஜியை கைது செய்வதற்காக அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையிலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து இருவரும் தங்களது செல்போன்களை அணைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் காணாமல் போயுள்ள ஹயாத் நிஷாவின் தலை தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவரது தலை மட்டும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயிலில் பயணித்தபோது தலை இருந்த பையை தனியாக எடுத்துச் சென்று வழியில் வீசியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியை அடையாளம் காண முடியாத வகையில் வேறு இடங்களில் விட்டுச் சென்றிருக்க வாய்ப்புள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக தலை தொடர்பான தடயங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதோடு அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது பிரியாணி அண்டாவில் மைதா போட்டு சில உடல் பாகங்களை வேக வைத்திருந்தது தெரிய வந்தது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராகுல் மற்றும் பகவதி மாஜியின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது செல்போன் தொடர்புகள் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து இருவரும் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. அசாம் மற்றும் ஒடிசாவில் போலீசார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் தலைமறைவு தம்பதி பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் விசாரணையின் முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.