ஈரோடு மாவட்டம் அருகே உள்ள பழமை வாய்ந்த லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருவதே அதிகம். ஆனால், இங்கு அருள்பாலிக்கும் நாராயணர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கி.பி.16-ம் நூற்றாண்டில் மைசூர் மன்னர்களால் இக்கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவைக் கணவராக அடைய விரும்பினார். அவரை ஏற்றுக்கொண்ட பெருமாள், மகாலட்சுமியைத் தனது இடது தொடையில் அமர வைத்துத் தாமரை மலரில் காட்சி தந்தார். அந்தப் புராண நிகழ்வின் அடிப்படையில், இக்கோவிலில் பெருமாள் மகாலட்சுமியைத் தனது இடது தொடையில் அமர்த்தியபடி லட்சுமி நாராயணராகப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பொதுவாகக் கோவில்களில் கருடபகவான் இறைவனைப் பார்த்தவாறே காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் கருடன் லட்சுமி நாராயணரைப் பார்க்காமல் தெற்கு நோக்கி அமைந்திருப்பது மிகவும் அபூர்வமான அம்சமாகும். மேலும், இக்கோவிலில் பழமை வாய்ந்த ஐந்து தலைப் பாம்பின் மீது நடனமாடும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை மற்றும் விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கோவிலுக்கு முன்புள்ள ஸ்தூபியில் நவநீத கிருஷ்ணர், அனுமன், வீர ஆஞ்சநேயர் மற்றும் விஜய ஆஞ்சநேயர் அருள் பாலிக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ஸ்தூபியை மூன்று முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இங்குள்ள லட்சுமி நாராயணரை மனமுருகி வழிபட்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆன்மீகச் சிறப்புமிக்க இக்கோவில் ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
