உலகளவில் வாழும் மலையாள மொழியைப் பேசும் மக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாதான் ஓணம் பண்டிகை. மலையாள ஆண்டின் ‘சிங்கம்’ மாதத்தில், அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில முக்கியமான சடங்குகளைச் செய்வதன் மூலம் மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளையும் அளவில்லாத செல்வ வளத்தையும் பெற முடியும் என்பது மக்களின் நம்பிக்கை.
புராண கதைகளின்படி, பக்தியில் சிறந்த மகாபலி மன்னனின் அகந்தையை போக்கவும் தேவர்களைக் காக்கவும் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார். மூன்றடி நிலம் தானமாகக் கேட்ட விஷ்ணு, விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரைப் பாதாள உலகிற்கு அனுப்பினார். ஆண்டிற்கு ஒருமுறை தன் நாட்டு மக்களைப் பார்க்க வரலாம் என்ற வரத்தை விஷ்ணுவிடம் பெற்ற மகாபலி மன்னன், மக்களைக் காண வரும் திருநாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
ஓணம் திருநாளில் பெருமாள் மற்றும் மகாபலியின் அருளைப் பெற முக்கியமாக 3 விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலாவதாக, வீட்டின் வாசலில் பல வண்ண மலர்களால் பூக்கோலமிட்டு (அத்தப்பூ) அலங்கரிக்க வேண்டும். இரண்டாவதாக, பாரம்பரியப் புதிய ஆடைகளை அணிந்து உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மூன்றாவதாக, சாம்பார், அவியல், பாயாசம் உள்ளிட்ட உணவுகளுடன் வாழை இலையில் ‘ஓணம் சத்யா’ விருந்து படைக்க வேண்டும்.
மகாபலி மன்னன் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தர் என்பதால், ஓணம் நாளில் அவரை மகிழ்வித்து உபசரிப்பதன் மூலம் பெருமாளின் அருளும் வீட்டில் மங்களமும் செழிப்பும் என்றும் நிலைத்திருக்கும். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்று கூடி அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாகவே இந்தச் சடங்குகள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
2026-ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26-ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 26 அதிகாலை தொடங்கி ஆகஸ்ட் 27 அதிகாலை வரை திருவோணம் நட்சத்திரம் உள்ளதால், இந்நாளில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது. குறிப்பாக, இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், பெருமாளின் மந்திரங்களை உச்சரிப்பதும் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகளையும் திருப்பத்தையும் தரும்.
