சகோதரர்–சகோதரிகளின் பாசத்தையும் பாதுகாப்பு உறுதியையும் கொண்டாடும் ரக்ஷா பந்தன் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி திதி ஆகஸ்ட் 27 காலை தொடங்கி, ஆகஸ்ட் 28 காலை வரை நீடிப்பதால் 27 அல்லது 28-ஆம் தேதி என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பண்டிகைக்கான முக்கிய நாள் ஆகஸ்ட் 28 என பஞ்சாங்கக் கணக்குகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு பௌர்ணமி திதி ஆகஸ்ட் 27 காலை சுமார் 9 மணியளவில் தொடங்கி, ஆகஸ்ட் 28 காலை சுமார் 9.48 மணிக்கு நிறைவடைகிறது. பத்ரா காலம் ஆகஸ்ட் 27-ஆம் தேதியிலேயே முடிவடைவதாகக் கூறப்படுவதால், ஆகஸ்ட் 28-ஆம் தேதி ராக்கி கட்டுவதற்கு ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது.
ராக்கி கட்டுவதற்கு அதிகாலை முதல் காலை வரையிலான நேரம் சுப நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லி கணக்குப்படி காலை 5.57 மணி முதல் 9.48 மணி வரை ராக்கி கட்டுவதற்கான சுப முகூர்த்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பஞ்சாங்க நேரங்கள் இடத்துக்கு ஏற்ப சிறிது மாறுபடக்கூடும் என்பதால், அந்தந்த பகுதி பஞ்சாங்க நேரத்தைப் பின்பற்றுவது நல்லது.
பண்டிகை நாளில் முதலில் பூஜைக்குத் தேவையான பொருள்களைத் தயார் செய்து, சகோதரர்–சகோதரி இருவரும் சுத்தமாக இருந்து வழிபாட்டைத் தொடங்குவது வழக்கம். சகோதரரின் நெற்றியில் திலகம் வைத்து, ஆரத்தி எடுத்த பின்னர் வலது கையில் ராக்கி கட்டி இனிப்பு வழங்கப்படுகிறது. சகோதரரும் சகோதரிக்கு பரிசு வழங்கி, அவரை ஆதரித்து பாதுகாப்பாக இருப்பதற்கான உறுதியை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு குடும்ப உறவை மேலும் வலுப்படுத்தும் நாளாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
