உள்நாட்டுத் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை போட்டியில், ஈஸ்ட் ஜோன் மற்றும் நார்த் ஈஸ்ட் ஜோன் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும், பந்துவீச்சில் மிரட்டலான திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்கள் எடுக்கத் தவறினார். ஆனால், அந்த ஏமாற்றத்தைத் தன் பந்துவீச்சில் ஈடுகட்டினார். அவர் வீசிய 3 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

குறிப்பாக, இன்னிங்ஸின் 28-வது ஓவரில் அவர் வீசிய பந்துகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றின. அந்த அணியின் டாப்-ஸ்கோரான கிஷன் லிங்டோவை (25 ரன்கள்) தனது சுழலில் சிக்க வைத்து கவர் திசையில் கேட்ச் கொடுக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, அதே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இம்லிவாட்டி லெம்பூரை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மூலம் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். வெறும் நான்கு பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சூர்யவன்ஷி.

பேட்டிங்கில் ஏற்பட்ட சறுக்கலை மனதளவில் பெரிதுபடுத்தாமல், பந்துவீச்சிலும் அணியின் வெற்றிக்குத் தன் பங்களிப்பை வழங்கிய இந்த இளம் வீரரின் மன உறுதி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு திறமையான ஆல்-ரவுண்டராகத் தன்னை நிரூபித்து வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்தத் துலீப் கோப்பை தொடர் சிறந்த அனுபவத்தையும் நீண்ட வடிவ கிரிக்கெட்டில் தனது பதிவுகளை மேம்படுத்தவும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், அணிக்குத் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இளம் நட்சத்திரம் மீதான எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.