அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் உள்ள பேபால் பார்க் மைதானத்தில், மினசோட்டா யுனைடெட் மற்றும் சான் ஜோஸ் எர்த்வேக்ஸ் அணிகளுக்கு இடையேயான மேஜர் லீக் சாக்கர் கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆட்டம் முடியும் தருவாயில், திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ஒரு மழலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆட்டம் நிறைவடைய வெறும் 90 விநாடிகளே இருந்த நிலையில், திடீரென திடலுக்குள் ஒரு குறுநடைப் பருவக் குழந்தை ஓடிவந்தது. இதைக் கண்ட நடுவர் உடனடியாக ஆட்டத்தை நிறுத்தினார். நேரலை வர்ணனை செய்துகொண்டிருந்த வர்ணனையாளர்கள் இதைக் கண்டு முற்றிலும் திகைத்துப் போய், “மைதானத்தில் ஒரு குழந்தை இருக்கிறது!” என்று நேரலையிலேயே ஆச்சரியத்துடன் கூறினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய அந்தத் குழந்தை, எந்தவித பயமும் இல்லாமல் மைதானத்தின் நடுவே சிறிது நேரம் சுதந்திரமாக ஓடித் மகிழ்ந்தது.
No estamos a favor de las invasiones de campo, pero en este caso en particular lo perdonamos 😅 pic.twitter.com/NTe2b7Q9Fh
— MLS Español (@MLSes) August 25, 2026
உடனடியாகச் செயல்பட்ட மைதான அதிகாரி ஒருவர், ஓடிச் சென்று அந்தக் குழந்தையைக் கனிவுடன் தூக்கிக் கொண்டு ஓரமாக அழைத்துச் சென்றார். பின்னர், பக்கத்து வாசல் அருகில் நின்றிருந்த அக்குழந்தையின் தாயிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். அதன்பிறகு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. இந்தப் போட்டியில் மினசோட்டா யுனைடெட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சான் ஜோஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தச் சம்பவம் விளையாட்டின் நடுவே கலகலப்பான தருணமாக அமைந்தாலும், இது போன்ற சம்பவங்கள் எம்.எல்.எஸ் லீக்கில் புதிதல்ல. இதற்கு முன்பு 2021-ஆம் ஆண்டு எஃப்சி சின்சினாட்ட மற்றும் ஆர்லாண்டோ சிட்டி அணிகளுக்கு இடையேயான போட்டியிலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிசி யுனைடெட் போட்டியிலும் இதேபோல் குழந்தைகள் மைதானத்திற்குள் நுழைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தத் தொடர்ச்சியான நிகழ்வுகள், மைதானத்தின் பாதுகாப்பு முறைகளைக் கவனித்து, குழந்தைகள் எளிதில் ஆடுகளத்திற்குள் வராதவாறு தடுப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் மத்தியில் எழுப்பியுள்ளது.
