பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் பலருக்கும் பெரும் தன்னம்பிக்கைக் குறைவை ஏற்படுத்துகின்றன. ஆனால், முறையான வாய் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் பற்களை மீண்டும் இயற்கையான வெண்மையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்க முடியும்.

தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவு தூங்குவதற்கு முன்பும் மென்மையான பிரஷ் கொண்டு இரண்டு நிமிடங்கள் பற்களைச் சரியாகத் துலக்குவது அவசியமாகும். மேலும், தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் வாயில் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொப்பளித்துத் துப்பும் ‘ஆயில் புல்லிங்’ முறை பற்களின் கறைகளை நீக்கி, அவற்றை பளிச்சிட வைக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை சிறிதளவு உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பற்களை லேசாகத் தேய்த்து வந்தால் பற்களின் மஞ்சள் கறைகள் அகலும். இதனுடன், பற்களுக்கு இடையில் சிக்கும் உணவுத் துகள்களை நீக்கத் தினமும் ‘டென்டல் ஃபிளாஸ்’  பயன்படுத்துவதும், உணவு சாப்பிட்ட பிறகு தவறாமல் தண்ணீரால் வாயை நன்றைக் கொப்பளிப்பதும் கறைகள் படிவதைத் தடுக்கும்.

ஆப்பிள், கேரட் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற நார்ப்பொருட்கள் நிறைந்த உணவுகளைக் கடித்துச் சாப்பிடும் போது பற்கள் இயற்கையாகவே சுத்தமாகின்றன. அதே நேரத்தில், அதிக இனிப்பு வகைகள், அடர் நிற பானங்கள் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை பற்களில் கறைகளையும் சொத்தையையும் உண்டாக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இயற்கையான பராமரிப்புகளுடன் சேர்த்து, பற்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி ‘டீப் கிளீனிங்’ செய்து கொள்வது சிறந்தது. முறையான பராமரிப்பும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் மட்டுமே உங்கள் புன்னகையை எப்போதும் வெண்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கும்.