தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் எழுப்பிய கருத்துகளும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான அவரது லஞ்சப் புகாரும் அரசியல் அரங்கில் பெரும் தீப்பற்ற வைத்துள்ளது. இது பற்றி பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டிய முனைப்பை விடக் கல்வியின் தரம் உயர்த்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாக முறையான தரச்சான்றிதழ்கள் கூட பெறப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், தனியார் கல்லூரிகள் மட்டுமே சிறப்பாகச் செயல்பட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம் வாங்குவது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். கடந்த திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது. அதில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவன் நான். இதற்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் நானே ஒரு சாட்சிதான்.
தி.நகரில் எந்த இடத்தில் எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பதையும், சிறுபான்மை நிறுவனத்திற்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதையும் என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியும்” என்று பரபரப்பாகப் பேசினார். நிதி அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டால் சட்டப்பேரவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பொறுப்பில் உள்ள ஒரு அமைச்சரே ‘நான் லஞ்சம் கொடுத்தேன்’ என்று கூறுவதே அப்பட்டமான தவறு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பியவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதே அடிப்படையில் இன்று அமைச்சர் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்ததாகப் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதையே குற்றமாக ஏற்று, முதலில் அவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் உடனடியாகப் புகார் அளிப்போம். உண்மையான விசயங்களை விட்டுவிட்டு மக்களை திசைதிருப்பவே இதுபோன்ற மடைமாற்று வேலைகளில் எதிர்தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்று காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
