கேஸ் அடுப்பில் வழக்கமாகத் தெரியும் நீல நிறத் தீக்கு பதிலாக மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தீ எரிந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எரிபொருள் முழுமையாக எரியாதபோது இதுபோன்ற மாற்றம் ஏற்படலாம். இதனால் கேஸ் அதிகமாகச் செலவாகுவதுடன், பாத்திரங்களின் அடிப்பகுதியில் கருமையும் படியலாம். முழுமையற்ற எரிப்பால் கார்பன் மோனாக்சைடு உருவாகும் வாய்ப்பும் இருப்பதால் கவனம் அவசியம்.

பொதுவாக பர்னர் துளைகளில் எண்ணெய், உணவுப் பொருட்கள் அல்லது தூசி படிவது இதற்குக் காரணமாக இருக்கலாம். முதலில் கேஸ் இணைப்பை அணைத்து, அடுப்பு முழுமையாக குளிர்ந்த பிறகே பர்னரை அகற்ற வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு வெள்ளை வினிகர், சமையல் சோடா மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, பர்னரை அதில் சிறிது நேரம் ஊற வைக்கலாம்.

பின்னர் பழைய பல் துலக்கும் தூரிகையால் பர்னரை மெதுவாகத் தேய்த்து சுத்தம் செய்யலாம். அடைப்பு உள்ள சிறிய துளைகளை மெல்லிய ஊசி போன்ற கருவியால் கவனமாகத் திறக்கலாம். அதேபோல், பர்னர் பொருத்தப்படும் பகுதியில் தூசி, அழுக்கு அல்லது சிலந்தி வலை போன்றவை இருந்தால் அவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

சுத்தம் செய்த பர்னரை முழுமையாக உலர்த்திய பிறகே மீண்டும் பொருத்த வேண்டும். அதன் பிறகு தீயை ஏற்றி, சீரான நீல நிறத்தில் எரிகிறதா என்பதைப் பார்க்கலாம். தொடர்ந்து மஞ்சள் அல்லது ஆரஞ்சு தீ, கீழ்ப்பகுதியில் தீ வெளியேறுதல், கேஸ் கசிவு போன்ற பிரச்னைகள் இருந்தால், சுயமாகப் பழுது பார்க்காமல் தகுதியான கேஸ் சேவை நிபுணரை அணுகுவது பாதுகாப்பானது.