உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி அரியானா மாநிலத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான மற்றும் விசித்திரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனைக் கொலை செய்துவிட்டு அவரது குடலைப் பையில் திணித்த மனைவியின் செயலால் காவல்துறையினரே மிரண்டு போயுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் தம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவரது மனைவி விமலா தேவி. இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ராஜேஷ் அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர்கள் ரிங்கு என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ராஜேஷ் வசித்த வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வீட்டு உரிமையாளர் ரிங்கு ஓடிச்சென்று மாடியில் பார்த்தபோது, அங்கு ராஜேஷ் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். அருகில் நின்ற அவரது மனைவி விமலா தேவி ஆக்ரோஷமாக கத்தியுடன் நின்றதோடு, கொலை செய்யப்பட்ட தனது கணவரின் வயிறுகளிலிருந்து சரிந்த குடல்களை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன ரிங்குவைக் கண்டதும், பயந்துபோன அந்தப் பெண் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ராஜேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாடியில் இருந்து குதித்து காயமடைந்த விமலா தேவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜேஷின் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரது வயிறு சுமார் 35 சென்டி மீட்டர் அளவுக்குக் கிழிக்கப்பட்டிருந்தது. பிரேதப் பரிசோதனையில் அவரது கல்லீரலின் கணிசமான பகுதியும், வலது சிறுநீரகமும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இந்த உடல் உறுப்புகள் எங்கு சென்றன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமலா தேவி பாரம்பரிய வைத்தியம் மற்றும் மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், ராஜேஷை நரபலி கொடுத்து அவரது குடல் மற்றும் பாகங்களை எடுத்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
தற்போது காயமடைந்துள்ள விமலா தேவி சுயநினைவின்றிச் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு நினைவு திரும்பிய பிறகே முழு உண்மையும் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தடயவியல் சான்றுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
