தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்கூர்நூல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் போதிய மழை பெய்யாததற்குக் காரணம் ஒருவரின் இறுதிச்சடங்கு முறையாகச் செய்யப்படாததே என்று நம்பிய கிராம மக்கள், மூன்று மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒருவரின் உடலைத் தோண்டி எடுத்து எரித்துள்ள சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பொதுவாக கிராமப் பகுதிகளில் மழை பெய்யாவிட்டால் இறைவனை வழிபடுவது வழக்கம். ஆனால், தெலுங்கானா மாநிலம் பதரா மண்டலத்தைச் சேர்ந்த கொடோனிபள்ளி  கிராமத்தில் கிராம மக்கள் வித்தியாசமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் முடிவை எடுத்துள்ளனர். இம்மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சநேயுலு என்பவர் ஹைதராபாத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு, உறவினர்களால் நள்ளிரவில் கிராமத்திற்கு அருகில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் பயிர்களும் விவசாயமும் பாதிக்கப்பட்டன. கிராம மக்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை தலைதூக்கியது. அதாவது அஞ்சநேயுலுவின் குடும்பத்தினர் அவரது உடலை முறையான பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு செய்து எரிக்கவில்லை மாறாகப் புதைத்துவிட்டனர். அதனால்தான் ஊரில் மழை பொழியவில்லை” என்று கிராமத்தினர் நம்பத் தொடங்கினர்.

இந்த மூடநம்பிக்கையின் காரணமாக, சில கிராம மக்கள் ஜே.சி.பி  இயந்திரத்தின் உதவியுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட அஞ்சநேயுலுவின் சடலத்தை வெளியே தோண்டி எடுத்தனர். அதன்பிறகு அந்தச் சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி பகிரங்கமாகத் தீயிட்டு எரித்தனர். இயற்கை நிகழ்வுகளுக்கும், ஒருவரின் இறுதிச்சடங்கு முறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற அறிவியல் உண்மையை மறந்து கிராம மக்கள் செய்துள்ள இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் இது கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.