மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரில் 2027ஆம் ஆண்டு கும்பமேளா திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மாநில அரசு சார்பில் சுமார் 34,732 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. வராலே சில முக்கியக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. வராலே, நிதிப் பற்றாக்குறை காரணமாக மகாராஷ்டிராவில் சுமார் 100 மராத்தி வழி கல்விப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அப்போது நாசிக் கும்பமேளாவுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியைக் குறிப்பிட்ட அவர், “நாசிக் கும்பமேளாவின் மொத்த பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் (அதாவது சுமார் 32 கோடி ரூபாய்) தொகையை இந்த அரசுப் பள்ளிகளுக்காகச் செலவழித்திருந்தாலே, 100 முதல் 150 பள்ளிகளை மூடப்படுவதிலிருந்து எளிதாகக் காப்பாற்றியிருக்க முடியும்” என்று தெரிவித்தார்.
மேலும், கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய காலங்களில் 8 முதல் 12 சதவீதமாக இருந்தது தற்போது குறைந்து வருவது கவலை அளிப்பதாகக் கூறிய அவர், குடியிருப்புப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மகாராஷ்டிரா அரசின் தகவல்படி, கும்பமேளாவின் நிரந்தர மற்றும் தற்காலிக மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமாராக 34,732 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதில் உள்கட்டமைப்பிற்கு 34,000 கோடியும், காரிடார் திட்டத்திற்கு 11,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாசிக் அதிகாரிகளின் கணிப்புப்படி, இந்த கும்பமேளாவில் சுமார் 12 கோடி பக்தர்கள் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரயில் மூலமாக மட்டும் சுமார் 3 கோடி பக்தர்கள் வருவார்கள் என ரயில்வே துறை மதிப்பிட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் நிப்பாணி பகுதியில் பிறந்த பி.வி. வராலே, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். பின்னர் 2024ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியில் இருந்து வருகிறார். இவர் வரும் ஜூன் 2027 இல் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
