பீகார் மாநிலத்தில், தன் மனைவியைப் படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்பிய கணவனை விட்டுவிட்டு, மனைவி தனது காதலனுடன் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தால்மிநகரைச் சேர்ந்த அஜய் குமார் சிங் என்பவருக்கும், அர்ச்சனா குமாரி என்பவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் அர்ச்சனா அரசு வேலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால், அஜய் தனது வருமானத்தில் அவரைப் படிக்க வைத்துள்ளார்.
தன் மனைவியின் கனவை நிறைவேற்ற அஜய் அவரைப் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து, பல நகரங்களுக்குத் தானே நேரில் அழைத்துச் சென்று தேர்வுகளை எழுத வைத்தார். அஜய்யின் முயற்சியாலும் அர்ச்சனாவின் உழைப்பாலும் அவர் பீகார் காவல்துறையில் காவலராகத் (Constable) தேர்வானார். தர்பங்காவில் பயிற்சியை முடித்த அர்ச்சனா, பேகுசராயில் பணி அமர்த்தப்பட்டார். ஆனால், அரசு வேலை கிடைத்து சீருடை அணிந்த பிறகு மனைவியின் போக்கில் மாற்றம் தெரியத் தொடங்கியது.
அர்ச்சனா தனது கணவருடன் பேசுவதைக் படிப்படியாகக் குறைத்துக் கொண்ட நிலையில், ஜூலை மாதம் வீட்டிற்கு வந்தபோது அவருடைய மொபைலில் விவேக் குமார் என்பவருடன் வாட்ஸ்அப் உரையாடல்கள் இருப்பதை அஜய் கண்டுபிடித்தார். இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. குடும்பத்தினர் கண்டித்தும் கேட்காத அர்ச்சனா, ஜூலை 3, 2026 அன்று நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறித் தனது காதலனுடன் சென்றுவிட்டார்.
பாதிக்கப்பட்ட கணவர் அஜய் இதுகுறித்து தால்மிநகர் காவல் நிலையத்திலும், பின்னர் ரோத்தாஸ் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அர்ச்சனாவின் தாயாரே தனது மகளின் செயலுக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “இப்படிப்பட்ட ஒரு மகளைப் பெற்றதற்கு வருந்துகிறேன்” என்று கூறிய அவர், தனது மருமகனுக்கு ஆதரவாக நின்று காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
கணவரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை அரசு அதிகாரியாக்கப் பாடுபட்ட கணவனுக்கு நேர்ந்த இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
