மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாபூர் பகுதியில் உள்ள ஒரு அரசு ஆதிதிராவிடர் காப்பகப் பள்ளியில் தங்கிப் படித்து வந்த 21 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் புகாரின் அடிப்படையில், அப்பள்ளியில் சமையல் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த கணபத் காவ்லி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஷாபூர் பகுதியில் இயங்கி வரும் இந்த அரசு பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்த கணபத் காவ்லி என்ற நபர், தங்களிடம் தொடர்ச்சியாக முறையற்ற வகையிலும், ஆபாசமாகவும் நடந்துகொண்டதாகக் கூறி 21 சிறுமிகள் பகீர் புகாரளித்தனர்.
சிறுமி மாணவிகள் அளித்த இந்தப் புகாரை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 21 சிறுமிகள் என்பதால், காவல்துறை இந்த வழக்கின் ஒவ்வொரு முனையையும் மிக எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறது. அந்த நபர் எப்போது முதல் இந்தத் தொல்லைகளைத் கொடுத்து வந்தார், வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மாணவிகளிடம் தனித்தனியாகப் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. பள்ளியின் உள்ளேயே தங்கிப் படிக்கும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதும், அங்குள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் பள்ளி நிர்வாகத்தின் அடிப்படைக் கடமையாகும். ஆனால், இது போன்ற ஒரு கொடூரச் செயல் நடக்கும் வரை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது என்ற கோபத்தில் பெற்றோர்களும் பொதுமக்களும் கொந்தளித்துள்ளனர்.
பள்ளிக்கு வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது முறையான பின்னணி சோதனை நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் துறைசார்ந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள கணபத் காவ்லியிடம் ஷாபூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் வாக்குமூலங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
