இந்திய தபால் துறையில் கிராமின் டக் சேவாக் (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட 25,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 2,095 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வேலையில் சேர காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
இந்தப் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் அடிப்படை கணினி அறிவும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.
இந்த வேலைக்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது என்பது முக்கிய சிறப்பம்சமாகும். விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் நபர்களுக்குப் பணியைப் பொறுத்து மாதம் ₹10,000 முதல் ₹29,380 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 45 வயது வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு 43 வயது வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் ஏதுமில்லை; பிற பிரிவினர் ₹100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் ஒருமுறைப் பதிவு 31.08.2026 அன்று தொடங்கி 19.09.2026 அன்று முடிவடைகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 02.09.2026 முதல் 21.09.2026 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
