ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் 9,124 ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளார்க்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாகத் தமிழ்நாட்டில் மட்டும் 1,410 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கிப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்  முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.04.1998-க்கு முன்பாகவோ அல்லது 01.04.2006-க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். முதல் நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு  ஆகிய மூன்று கட்டங்களின் அடிப்படையில் தகுதியான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர் உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பொதுப் பிரிவினர் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in/web/careers/current-openings  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.08.2026 ஆகும். கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க விரைவாக விண்ணப்பிப்பது நல்லது.