வேலை நேர்காணலின் இறுதி கட்டத்தில் கேட்கப்படும் ஒரு கேள்வி, வேலை வாய்ப்பையே இழக்கச் செய்யும் என்பதை கரண் கோக்னா என்ற மென்பொருள் மேலாளர் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஸ்டார்ட்-அப் நிறுவன ஒன்றில் நேர்காணல் செய்துகொண்டிருந்தபோது, நிறுவனத்தின் சி.இ.ஓ-விடம் அவர், “நீங்கள் இருசக்கர வாகன சந்தையிலும் நுழையப் போகிறீர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு சி.இ.ஓ, “உங்கள் கருத்து என்ன? நாங்கள் நுழைய வேண்டுமா?” என்று திருப்பித் திருப்பிக் கேட்டுள்ளார்.

நான்கு சக்கர வாகன சந்தையைப் பற்றி நன்கு தயாரிப்புடன் சென்றிருந்த கரணால், இருசக்கர வாகன சந்தை குறித்து எந்தவித தெளிவான கருத்தையும் கூற முடியாமல் தடுமாறியுள்ளார். இதன் விளைவாக, அடுத்த நாளே அவருக்கு வேலை மறுக்கப்பட்ட மின்னஞ்சல் வந்துள்ளது.

இந்த அனுபவம் மூலம், நேர்காணலுக்குச் செல்பவர்கள் பதில்களைத் தயாரிப்பதில் காட்டும் ஆர்வத்தை, தாங்கள் கேட்கப்போகும் கேள்விகளைத் தயாரிப்பதிலும் காட்ட வேண்டும் என்று கரண் அறிவுறுத்துகிறார். நேர்காணல் செய்பவர்கள், விண்ணப்பதாரரின் சிந்தனைத் திறனை அறியவே கேள்விகளைத் திருப்பி கேட்கலாம் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலர் கரணின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும், வேறு சிலர், “உங்களிடம் ஒரு கேள்வியைத் திருப்பி கேட்பது நேர்காணல் செய்பவரின் பலவீனம், அதற்காக நீங்கள் வருத்தப்படத் தேவையில்லை” என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், நேர்காணலின் கடைசி நிமிடம் வரை எச்சரிக்கையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்தச் சம்பவம் கற்றுத்தரும் பாடம்.