உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49). இவரது மனைவி பிரித்தவி. கூலித் தொழிலாளியான அவதேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் அவரது மனைவி பிரித்தவி, வீட்டுச் செலவிற்காக 100 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவதேஷ் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரும் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற பிரித்தவி, வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து, எதிர்பாராத விதமாக அவதேஷ் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த அவதேஷின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து, அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மனைவி பிரித்தவியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெறும் நூறு ரூபாய்க்காகக் கணவனைக் மனைவியே எரித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
