அயர்லாந்துக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய டி20 தொடரையும் இழக்கும் பேராபத்தில் இந்திய கிரிக்கெட் அணி தவித்து வருகிறது. தொடரைத் தக்கவைக்க இன்றைய மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், அறிமுக ஆட்டத்தில் சோபிக்காத இளம் அதிரடி தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சி மீது கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே, ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற தீவிர வலைப்பயிற்சியின் போது, த்ரோடவுன் நிபுணர் ரகு வீசிய அதிவேக பவுன்சர் பந்து, வைபவ் சூர்யவன்சியின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமாகத் தாக்கியது. இதனால் வலியால் துடித்த 15 வயதான அந்த இளம் வீரர், மைதானத்திலேயே நிலைகுலைந்து அமர்ந்தார். உடனடியாக பயிற்சி நிறுத்தப்பட்டு அவருக்கு முதலுதவியும், தண்ணீரும் வழங்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

 

எனினும், அதிர்ஷ்டவசமாக சூர்யவன்சிக்கு பெரிய அளவில் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. சுமார் 5-6 நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டெழுந்த அவர் சிங்கமென மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கி, காயத்திற்கு முன்பிருந்த அதே தீவிரத்துடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியினர் ஷார்ட் பால் வீசி இவருக்கு நெருக்கடி கொடுத்ததால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நெட்ஸில் ஷார்ட் பால்களை மட்டுமே குறிவைத்து அவர் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, மற்றொரு வீரரான அபிஷேக் சர்மா, வைபவின் ஒவ்வொரு ஷாட்டையும் மிக உன்னிப்பாகக் கவனித்து, தானும் அதே பாணியில் விளையாடிப் பழகினார். மீதமுள்ள மூன்று போட்டிகளும் இந்திய அணிக்கு ‘வாழ்வா-சாவா’ போராட்டமாக மாறியுள்ள சூழலில், இந்த இளம் புயலின் பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது