மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் காதலனை சந்திக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்த ஜோதி அகர்வால் (25) என்ற இளம்பெண்ணை அவரது தாயும், தம்பியும் அடித்துக் கொலை செய்து, தற்கொலை என நாடகமாடிய ஆணவக் கொலை விவகாரம் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது அம்பலமாகியுள்ளது. பெருங்காய வியாபாரியின் மகளான ஜோதி அகர்வால், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2, 2026 அன்று அவர் தன் காதலனைச் சந்திக்க வீட்டை விட்டுப் புறப்பட்டபோது, வீட்டில் கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த தம்பி விகாஸ் அகர்வால், அக்கா ஜோதியின் தலையை சுவற்றில் பலமாக மோதியதோடு, தாய் ஷீத்தல் அகர்வாலும் சேர்ந்து அவரை சுமார் 30 நிமிடங்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் ஜோதியின் உடல் முழுவதும் 12 முதல் 13 பலத்த காயங்கள் ஏற்பட்டு, காதுக்கு பின்புறம் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக அதிக ரத்தம் வெளியேறியுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, கொலையைத் தற்கொலையாக ஜோடிப்பதற்காக அந்தப் பெண்ணுக்கு அவர்கள் வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 4-ஆம் தேதி ஜோதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இதனைத் தற்கொலை என குடும்பத்தினர் கூறி வந்த நிலையில், உடற்கூறாய்வு அறிக்கையில் பதிவாகியிருந்த காயங்களும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளில் 3 நாட்களுக்கான காட்சிகள் அழிக்கப்பட்டிருந்ததும் போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதை வைத்து வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், குற்றத்தை மறைக்க அவர்கள் நாடகமாடியது உறுதியானது. இதையடுத்து, கொலைக் குற்றத்திற்காக தம்பி விகாஸ் அகர்வால் மற்றும் தாய் ஷீத்தல் அகர்வால் ஆகிய இருவரையும் இந்தூர் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.