பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் மழை, போதிய வெளிச்சமின்மை அல்லது சில நேரங்களில் நாய், தேனீக்கள் மைதானத்திற்குள் நுழைவதால் தடைபடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கிலாந்தில் நடைபெற்ற ‘நார்த் ஈஸ்ட் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில், சுமார் 800 கிலோ எடையுள்ள காளை மாடு ஒன்று திடீரென மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டியே ரத்து செய்யப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.
‘பர்னோப்ஃபீல்ட் கிரிக்கெட் கிளப்’ மற்றும் ‘ஹெட்டன் லயன்ஸ்’ ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மைதானத்திற்குள் நுழைந்த காளை மாடு அங்கிருந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை நோக்கி ஓடியதால், அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.
Cow stops play as @HettonLyonsCC attempt chase down 227 against Burnopfield CC.
🐄🏏❌😜😜@SkyCricket @SkySportsNews @neplcricket @burnopfieldcri1
just wanted to remind everyone that it still has the best moo-vement on the pitch. 😂#PitchInvader #CowCorner #OnlyInCricket pic.twitter.com/J92UBXBL1X— Hetton Lyons CC (@HettonLyonsCC) July 4, 2026
இந்த காளை மாடு அருகில் உள்ள பண்ணையிலிருந்து சுமார் 1.6 கிலோமீட்டர் தூரம் பயணித்து இந்த கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்துள்ளது. காளையின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மைதானத்திற்குள் ஒரு பசு மாடும் கொண்டு வரப்பட்டது, ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. மேலும், காளையை விரட்ட முயன்ற அதன் உரிமையாளரான உள்ளூர் விவசாயி ஒருவரையும் அது முட்டித் தள்ளியது; அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை. காளையை வெளியேற்ற போலீசாரும் வரவழைக்கப்பட்டனர், ஆனால் அதற்குள் காளை அங்கிருந்து தானாகவே சென்றுவிட்டது. எனினும், போட்டி நடப்பதற்கான நேரம் முடிந்துவிட்டதால், நடுவர்கள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
