மது மற்றும் போதைப்பழக்கம் ஒரு மனிதனின் குடும்பத்தை அழிப்பது மட்டுமின்றி, அவனது இறுதி நாட்களையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நரகமாக மாற்றிவிடும் என்பதை விளக்கும் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவத்தை அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ‘DaughterofChrist1011’ என்ற தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாடலிங் துறையில் இருந்த அவரது தந்தை, மதுவுக்கு அடிமையானதால் பிற்காலத்தில் கொடூரமானவராக மாறியுள்ளார்.

அதிகப்படியான குடிப்பழக்கத்தால் ‘கல்லீரல் சிரோசிஸ்’  நோயால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் மருந்துகளை உட்கொள்ள மறுத்த நிலையில், மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு அவரது மகள் அவரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது படுக்கையில் இருந்த தந்தை, பயத்தால் மரணக் கூச்சலிட்டு மகளை அறையை விட்டு ஓடிவிடுமாறு கெஞ்சியுள்ளார். அறையின் சுவர்கள் தீப்பற்றி எரிவதாகவும், நீண்ட பற்களைக் கொண்ட விசித்திரமான விலங்குகள் தன்னை நோக்கி வருவதாகவும், பயங்கரமான அழுகிய நாற்றம் வீசுவதாகவும் கூறி அவர் அலறியுள்ளார்.

மதுப் பழக்கத்தை திடீரென நிறுத்தியதால் ஏற்படும் மாயத்தோற்றம் என்று செவிலியர்கள் கூறினாலும், தன் தந்தை நரகத்தை நேரடியாகக் கண்டுள்ளார் என்றே அவரது மகள் நம்புகிறார். இதன் பின்னர் அவர் தீவிரக் கண்காணிப்புப் பிரிவிற்கு  மாற்றப்பட்டார். அங்கு மரணத்தின் கடைசி தருணத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது; அவர் அழுதுகொண்டே இயேசுவை ஏற்றுக்கொண்டதுடன், அவரது பாதிரியார் சகோதரர் அவருக்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்.

பிரார்த்தனை முடிந்ததும் அந்த அறை முழுவதும் ஒரு அமைதி நிலவியுள்ளது. அவர் உயிரிழப்பதற்கு சரியாக 5 நிமிடங்களுக்கு முன்பு, தனது கண்களைத் திறந்து படுக்கைக்கு அருகில் ஒரு அழகான பிரகாசமான ஒளியையும், ஏற்கனவே இறந்துவிட்ட தனது தாயையும் கண்டதாகக் கூறி, மிகுந்த அமைதியுடன் தனது இறுதி மூச்சை விடுத்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே முழுமையாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.