மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் வைத்து மருத்துவமனைக்குச் சுமந்து செல்லப்பட்ட கொடூரமும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசரச் சிகிச்சை வாகனங்கள் கிடைக்காததால், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் 4 முதல் 5 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கட்டிலில் கிடத்தி, தங்கள் தோள்களில் சுமந்தபடி சேறும் சகதியுமான தற்காலிகப் பாதையில் நீண்ட தூரம் நடந்து சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையை அடைவதற்கு முன்பாகவே, வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும் இந்த அவலநிலை நீடிப்பதாக மக்கள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
The Health Minister of Madhya Pradesh comes from Rewa.
Yet, in Mangawan, Rewa, a tribal woman could not reach the hospital in time because there was neither a proper road nor an ambulance.
She died before reaching the hospital.
This is the reality of 20 years of BJP rule in… pic.twitter.com/CZyzS6Hfnv
— Kamleshwar Patel (@Kamleshwar_INC) July 6, 2026
இந்த விவகாரம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளதுடன், எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. பழங்குடியின மக்கள் வாழும் கிராமப்புறப் பகுதிகளில் இன்னமும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோ, அவசரக்கால ஆம்புலன்ஸ் சேவைகளோ சென்றடையவில்லை என்றும், மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் துறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளதை இச்சம்பவம் காட்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்குக் கூட முறையான மருத்துவ உதவியை அரசு வழங்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது விரிவான பதிலோ அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
